பிரதம மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்கார் யோஜனா விழிப்புணர்வு கூட்டம்
சிவகாசி : சிவகாசியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பில் பிரதம மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்கார் யோஜனா (பிரதம மந்திரி வளர்ச்சியடைந்த பாரத வேலைவாய்ப்பு திட்டம்) விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வருங்கால வைப்பு நிதி மண்டல கமிஷனர் அழகிய மணவாளன் தலைமை வகித்தார். அமலாக்க அதிகாரிகள் சீனிவாசன், ஈஸ்வரன், சதீஷ்குமார் மேற்பார்வையாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். வருங்கால வைப்பு நிதி மண்டல கமிஷனர் கூறுகையில், இத்திட்டம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களை நிறுவனங்கள் தக்கவைத்துக்கொள்ளவும் உருவாக்கப்பட்டது. 2025 ஆக. 1 முதல் புதிதாக சேரும் தொழிலாளர்களுக்கு ஒருமாத சம்பளம் ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை இரண்டு தவணையாக 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும். நிறுவனங்களுக்கு தொழிலாளர்களின் சம்பளத்திற்கு ஏற்றார் போல் ஊக்கத்தொகை வழங்கப்படும். புதிதாக சேர்க்கும் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக மாதத்திற்கு ரூ. 3 ஆயிரம் வரை 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை நிறுவனத்திற்கு வழங்கப்படும். இத்திட்டம் எல்லா நிறுவனங்களுக்கும் 2027 ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும். உற்பத்தித்துறைக்கு மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கபட உள்ளது, இவ்வாறு அவர் கூறினார். காளீஸ்வரி குழுமம் நிர்வாக இயக்குனர் செல்வராஜன், தமிழ்நாடு கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) தலைவர் கணேசன், செயலாளர் சங்கர், பொருளாளர் சீனிவாசன், இணை பொருளாளர் பாஸ்கர் ராஜ், பட்டாசு, தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.