ஆயத்தம்:மாவட்டத்தில் கண்மாய்கள், நதிகள் புணரமைப்பு பணிகள்
மாவட்டத்தின் கண்மாய்கள், நதிகள் நீர்வளத்துறை மூலம் வைப்பாறு, மேல் வைப்பாறு, குண்டாறு என மூன்று வடி நிலக் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 342 கண்மாய்கள் உள்ளன. இவற்றில் 70 கண்மாய்கள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதே போல் 700க்கும் மேற்பட்ட அதிக எண்ணிக்கையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கண்மாய்களிலும் பணிகள் செய்தால் நீர் மேலாண்மை மேம்படும் வாய்ப்புள்ளது. ஒன்றிய பகுதிகளில் சில கண்மாய்களில் மடை பழுது போன்ற பணிகள் நடக்கிறது. ஆனால் கண்மாய்கள் பல மேடாகி விட்டன. ஆழப்படுத்தினால் மட்டுமே தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. கண்மாய்கள் தவிர வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி ஆகிய அணைகளின் நீர்வரத்து பாதைகளுக்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது. கன்னிச்சேரி இரு தடுப்பணைகளை சீரமைத்தல், கலங்காப்பேரியில் தடுப்பணை அமைத்தல், பி.புதுப்பட்டியில் அணைக்கட்டு கட்டுதல் போன்ற பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் 7 ஆயிரத்து 143 எக்டேர் நிலங்கள் நேரடி பாசன முறையிலும் 4 ஆயிரத்து 236 எக்டேர் நிலங்கள் மறைமுக பாசன முறையிலும் பயன்பெறும். சிவகாசி ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர் பணிகள் ரூ.28 கோடிக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இருப்பினும் ஆனைக்குட்டத்தில் நீர் வரத்தின் போது கரையின் ஒரு பகுதி தாழ்ந்து விடும் பிரச்னை புவியியல் வல்லுனர் குழுவால் கண்டறியப்பட்டுள்ளதால், அதை விரைந்து சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. நதிகளில் முக்கியமாக கவுசிகா நதியில் 11.5 கி.மீ., துரத்திற்கு புனரமைக்க ரூ.20.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வடமலைக்குறிச்சியில் இருந்து அதன் நீர்வழித்தடம் துார்வாரப்பட்டு வருகிறது. இதனால் 10 ஆயிரத்து 71 எக்டேர் நிலங்களில் பாசனம் உறுதி செய்யப்படும். இதில் நகர்ப் பகுதியில் 1.6 கி.மீ.,க்கு மட்டும் கழிவை சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடும் வகையில் 'பைலட்' எனும் முன்மாதிரி திட்டமாக செய்கின்றனர். இது வெற்றியடைந்தால் சாத்துார் வைப்பாற்றிலும் செயல்படுத்தப்படும் என்கின்றனர் அதிகாரிகள். பிளவக்கல் அணையில் ரூ.10 கோடிக்கு பூங்காவும் கட்டப்பட்டுள்ளது. நீர்வளத்துறை செயற்பொறியாளர் மலர்விழி கூறியதாவது: புனரமைப்பை துாரிதப்படுத்தி மார்ச்சுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.