தனியார் நர்சிங் கல்லுாரி மாணவிகள் கல்வி கட்டணத்தை கேட்டு மறியல்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே அனுமதி பெறாத தனியார் நர்சிங் கல்லுாரியில் கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்காததால் பெற்றோர், மாணவிகள் நான்கு வழி சாலையில் மறியல் செய்ததையடுத்து போலீசார் கலைக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில் செயல்பட்ட தனியார் நர்சிங் கல்லுாரி அரசு அங்கீகாரம் வழங்கப்படாததை அறிந்த மாணவிகள் 10 நாட்களுக்கு முன்பு, உள்ளிருப்பு போராட்டம், ரோடு மறியல் செய்தனர். போலீசார், வருவாய்த் துறையினர் தலையிட்டு மாணவிகளுடைய கல்வி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்லுாரி தாளாளர் டிக்காக் ஜாக்சன் கைது செய்யப்பட்டார். மேலும் கல்வி கட்டணத்தை நிர்வாகம் பிப்.20 ல், வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.நேற்று மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கல்வி கட்டணத்தை பெற கல்லுாரிக்கு வந்தனர். கல்லுாரி கட்டணத்தை நிர்வாகம் வழங்காததால் மாணவிகள், பெற்றோர் நேற்று மதியம் மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் மறியல் செய்தனர். போலீசார் கல்லுாரிக்கு சென்று பேசி கொள்ளலாம் கலைந்து செல்லுங்கள் என கூறியதை ஏற்க மறுத்ததால், போலீசார் மாணவிகள், பெற்றோர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரையும் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்த நிலையில், போராட்டத்தை கைவிட்டு கலெக்டரிடம் சென்று முறையிடுவோம் என கூறி கலைந்து சென்றனர்.