உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிரச்சனையும், தீர்வும் :

பிரச்சனையும், தீர்வும் :

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை-- விருதுநகர் ரோடு வழியாக புறவழிச் சாலை பணிகள் மந்த கதியில் நடப்பதால் நகரில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் சிக்கித் தவிக்கிறது.அருப்புக்கோட்டை நகர் குறுகலான ரோடு அமைப்பில் உள்ளது. திருச்சுழி ரோடு, மதுரை ரோடு, விருதுநகர் ரோடுகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள்தினமும் வந்து செல்கின்றன. ரோடு ஆக்கிரமிப்பால் குறுகி விட்டன. இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியவில்லை. நகரில் காலை மாலை வேளைகளில் தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் நகரின் முக்கிய சந்திப்புகளில், காலை மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை கருத்தில் கொண்டு அருப்புக்கோட்டை-விருதுநகர் ரோட்டில், கோபாலபுரம் வழியாக பைபாஸ் ரோட்டை தொடும் வகையில் ஒரு புற வழி சாலையும், ராமசாமிபுரம் வழியாக பைபாஸ் ரோட்டில் செல்லும் வகையில் மற்றொரு புறவழிச் சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2016ல் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை முடிவு செய்து 66 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி ரூ. 300 கோடியில் ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2023ல், அருப்புக்கோட்டை மேற்கு புறவழிச் சாலை அமைக்கும் பணி துவங்கியது. பணிகள் மந்தகதியில் நடப்பதால் இதுவரை 60 சதவிகித பணிகள் தான் முடிவடைந்துள்ளது.

ஆமை வேகத்தில் பணிகள்

சீனிவாசன், அருப்புக் கோட்டை: அருப்புக்கோட்டை-விருதுநகர் ரோட்டில் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைக்கப்பட்டு வரும் 2 புறவழி சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் நகரில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. வாகனங்கள் பெருகிவரும் நிலையில் இதுபோன்று புறவழிச் சாலைகள், அணுகு சாலைகளை கூடுதலாக உருவாக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

ராதாகிருஷ்ணன், வியாபாரி, அருப்புக்கோட்டை: நகரில் பள்ளி கல்லூரி வாகனங்கள் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட புறவழிச் சாலை பணிகளை விரைவில் முடித்து நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். பாலையப்பட்டி அணுகு சாலையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

தீர்வு

புற வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க அரசு அறிவுறுத்த வேண்டும். 2 சாலைகளில் ஏதாவது ஒன்றை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் குறையும். பாலையம்பட்டி முத்தரையர் நகரில் உள்ள அணுகு சாலையையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நகரில் உள்ள ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ