உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரின் வாழ்வாதாரமான கவுசிகா நதியை காப்பாத்துங்க: கழிவுகள், ஆக்கிரமிப்புகளால் அழியும் நிலை

விருதுநகரின் வாழ்வாதாரமான கவுசிகா நதியை காப்பாத்துங்க: கழிவுகள், ஆக்கிரமிப்புகளால் அழியும் நிலை

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி, பேரையூர், எழுமலை பகுதி கண்மாய்கள் நிரம்பியும், காட்டுப்பகுதிகளில் பெய்யும் மழைநீரும் விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு வருகிறது.அங்கிருந்து கவுசிகா நதியாக சின்னமூப்பன்பட்டி, மீனாட்சிபுரம், நகருக்குள் பர்மா காலனி, பாத்திமா நகர், ஆத்துமேடு, அல்லம்பட்டி வழியாக குல்லுார்சந்தை அணையை அடைகிறது. அங்கிருந்து கோல்வார்பட்டி அணை நிரம்பி, இருக்கண்குடி அணைக்குச் சென்று வைப்பார் நதியுடன் கலக்கிறது. ஒருகாலத்தில் வற்றா நதியாக இருந்து விருதுநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. பின் கிராமங்களில் உள்ள ஓடைகள் ஆக்கிரமிப்பால் நதிக்கான நீர்வரத்து தடைபட்டதுடன் சுற்றுவட்டார கழிவுநீர் கலக்கத் துவங்கியது.கரையோரங்களில் குப்பையை கொட்டுவதால் கொசு உற்பத்தி பெருகியும், சாக்கடை தேங்கிய பகுதிகளில் ஆகாயத் தாமரை வளர்ந்தும், கருவேல மரங்களால் புதர் மண்டியும், கழிவுநீர் ஓடையாக காட்சியளிக்கிறது. இதனால் குல்லுார்சந்தை அணையும் கழிவுநீர் குளமாக துர்நாற்றம் வீசுகிறது. கடந்த நவம்பரில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க விருதுநகர் வந்த முதல்வர் ஸ்டாலின், கவுசிகா நதி, அருப்புக்கோட்டை கஞ்சம்பட்டி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளை துார்வார ரூ.41 கோடியில் நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவித்தார்.இதையடுத்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு மதிப்பீடு செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாலும் பொதுப்பணித்துறையினர் போதிய அக்கறை காட்டாததால் இதுவரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. சட்டசபையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகளுக்கான விவாதம் முடிவுற்ற நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படாததால் இப்பகுதி மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 33, விருதுநகர் மாவட்டத்தில் 50 என 83 ஊர்கள் கவுசிகா நதியால் பயன்பெறுகின்றன. இதில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரோசல்பட்டி, கூரைக்குண்டு, சிவஞானபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடவேண்டும்.ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையோரங்களை பலப்படுத்தும் வகையில் இருபுறமும் ரோடு அமைக்க வேண்டும். ஆற்றை முறையாக துார்வாரி சிறுசிறு தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வைகை நதியுடன் கவுசிகா நதியை இணைப்பதால் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் உட்பட மக்களின் வாழ்வாதாரம் செழிக்கும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி