ரோசல்பட்டி, சிவஞானபுரம் ஊராட்சி பகுதிகளை விருதுநகர் நகராட்சியுடன் இணைக்க பரிந்துரை
விருதுநகர்: விருதுநகர் நகராட்சியுடன் ஏற்கனவே கூரைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் இணைக்கப்பட்டுள்ள நிலையில் ரோசல்பட்டி, சிவஞானபுரம் ஊராட்சிகளின் பகுதிகளை இணைத்து நகராட்சி நிர்வாக ஆணையர் ஒப்புதலுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.2024ல் விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியை மொத்தமாக இணைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு ஊராட்சி நிர்வாகம், மக்கள் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கூரைக்குண்டில் உள்ள 7 குக்கிராமங்களில் செவல்பட்டி, கூரைக்குண்டு, சூலக்கரைமேடு பகுதிகளை இணைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு மாவட்ட நிர்வாகம் வந்துள்ளது. மாறாக அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, கோட்டைப்பட்டி, குமாரசாமிராஜா நகர் பகுதிகளை இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போல் ரோசல்பட்டி ஊாரட்சியில் ரோசல்பட்டி குமராபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய 3 குக்கிராமங்களையும், சிவஞானபுரம் ஊாரட்சியில் சின்னமூப்பன்பட்டி, பேளம்பட்டி, லட்சுமி நகர் ஆகிய 3 குக்கிராமங்களையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.பாவாலி ஊராட்சியில் அய்யனார் நகர், கலைஞர் நகர், பராசக்தி நகர், முத்துராமலிங்க நகர் பகுதிகளையும் இணைக்க உத்தேசித்து நகராட்சி நிர்வாக ஆணையர் ஒப்புதலுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.இதன் மூலம் நிலபரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மாநகராட்சிக்கான பரப்பை எட்டும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும் வரி, வருவாய் ஆகியவற்றை பொறுத்துதான் மாநில நகராட்சி நிர்வாக ஆணையரகம் முடிவு செய்யும்.இருப்பினும் நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “முன்பு கூரைக்குண்டு ஊராட்சியை முழுதும் இணைக்க கோரியதும் உத்தேச ஒப்புதல் பட்டியல் தான். அதே போல தற்போது பிற ஊராட்சிகளை இணைக்க கூறியிருப்பதும் உத்தேச ஒப்புதல் பட்டியல் தான். அரசு தான் இறுதி முடிவு எடுக்கும், என்றனர்.ஏற்கனவே மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி உள்ளது. ராஜபாளையத்தையும் மாநகராட்சியாக்க முனைப்பு காட்டப்பட்டது. ஆனால் அந்த பணிகள் தொய்வில் உள்ளது. இந்நிலையில் எல்லை பரப்பு பரவலாக விரிவாக்கம் அடையும் பட்சத்தில் மாநகராட்சியாக விருதுநகர் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது.