தவிர்த்தருளிய நாதர் கோயிலின் 103 ஏக்கர் நிலம் மீட்பு
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.20.66 கோடி மதிப்பிலான 103.47 ஏக்கர் நன்செய் நிலம் மீட்கப்பட்டது.இக்கோயிலுக்கு சொந்தமான கோவிலுாரிலுள்ள 103 ஏக்கர் 43 சென்ட் நிலத்தை அம்மையப்பா விவசாய குத்தகைதாரர் கூட்டுறவு சங்கம் சார்பில் குத்தகை எடுத்திருந்தனர். அச்சங்க உறுப்பினர்கள் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலத்திற்கு பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தாததால் 3148 கோட்டை நெல், 2410 வைக்கோல் கட்டு குத்தகை பாக்கி இருந்து வந்துள்ளது.குத்தகையை செலுத்த கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மதுரை வருவாய் நீதிமன்ற உத்தரவுப்படி குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய இணை ஆணையர் செல்லத்துரை உத்தரவிட்டார்.அதன்படி நேற்று அறநிலையத்துறை உதவியாளர் வளர்மதி தலைமையில் ஆலய நிலங்கள் தனி தாசில்தார் மாரிமுத்து, கோயில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், செயல் அலுவலர் கலா ராணி, அறநிலையத்துறை அதிகாரிகள் 103.66 ஏக்கர் நிலங்களை மீட்டனர்.