விழிப்புணர்வின்றி ரேஷன் அரிசியை வாங்க தயக்கம்; செறிவூட்டப்பட்டதால் அதன் பயன் தெரியாமல்
மத்திய அரசு ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகிக்கும் திட்டத்தை 2023ல் துவங்கியது. மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு செறிவூட்டப்பட்ட அரிசி பயன்படுகிறது. அரிசியில் இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்டவைகள் சேர்க்கப்பட்டு மாவாக அரைத்து, குருணைகளாக மாற்றி செறிவூட்டப்பட்ட அரிசி தயார் செய்யப்படுகிறது. 100 கிலோ ரேஷன் அரிசியில் ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து வினியோகம் செய்யப்படுகிறது. பொது மக்களுக்கு இது குறித்து முறையான போதிய விழிப்புணர்வு மற்றும் தகவல்களை குடிமை பொருள் வினியோக துறையினர் செய்யாததால் மக்கள் இந்த அரிசியை வாங்க தயங்குகின்றனர். வாங்கினாலும் பயன்படுத்துவது இல்லை. மிதப்பது பிளாஸ்டிக் அல்ல செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்து விற்பதாகவும் புரளியை கிளப்பி விடுகின்றனர். சமைக்க இந்த அரிசியை பயன்படுத்தும் போது செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகள் தண்ணீரில் மிதப்பதால், இதை கழிவு என வடிகட்டி அரிசியை மட்டும் சமைக்கின்றனர். குடிமைப்பொருள் வழங்கும் துறையினர் இதன் பயன்களையும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். மத்திய அரசு திட்டம் என்பதால் மாநில அரசும் இதில் தேவையான அக்கறை காட்டவில்லை.மக்களும் இந்த அரிசியை வாங்க தயங்குகின்றனர். இது ரேஷன் அரிசி கடத்துபவர்களுக்கு வசதியாக போய்விட்டது. செறிவூட்டப்பட்ட அரிசி வாங்கி பயன்படுத்தாமல் இருப்பவர்களிடம் வாங்கி, பிற மாநிலங்களுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்கின்றனர். இந்த அரிசியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளான மாவு உள்ளிட்ட பொருள்களாக மாற்றி அதிக விலைக்கு விற்கின்றனர்.மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் மற்றும் அதன் பயன்பாடு முறையை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பயனுள்ளது, வீணடிக்க கூடாது டாக்டர் மாரியப்பன், நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு துறை, விருதுநகர் : 99 கிலோ ரேஷன் அரிசிக்கு ஒரு கிலோ செறிவூடப்பட்ட சத்து சேர்க்கப்பட்ட அரிசி மணிகளை கலந்து போடுவார்கள். இது ரத்த சோகையை தடுக்க உதவும். வைட்டமின் சத்துக்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவைப்படும் போலிக் அமிலம் இதில் சேர்க்கப் படுகிறது. மக்கள் இந்த ரேஷன் அரிசியை வாங்கி களையும் பொழுது செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் தண்ணீரில் மிதக்கும். இதை களைந்து கொட்டி விடுவர். இதை தவிர்க்க வேண்டும். இதை அப்படியே வீணாக்காமல் சமைக்க வேண்டும். மத்திய அரசு அதிக நிதியில் செலவழித்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குகிறது. இதை மனித நுகர்வுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். விலங்குகளுக்கு கொடுக்கக் கூடாது.