ரூ.45 லட்சத்தில் சக்கரை குளம் சீரமைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமானதும் பாழடைந்தும் கிடந்த சக்கரை குளம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் ரூ 45 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. இதனால் ஆண்டாள் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமாக திருமுக்குளம், திருப்பாற்கடல், சக்கரை குளம் ஆகிய குளங்கள் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல், சேதமடைந்து அசுத்த நிலையில் காணப்பட்டது. இந்த 3 குளங்களையும் சீரமைக்க வேண்டுமென ஆண்டாள் பக்தர்கள் கோரி வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் பலமுறை தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டு வந்தது.இதன்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் முயற்சியால் ரூ.1 கோடி செலவில் திருப்பாற்கடல் சீரமைக்கப்பட்டு தற்போது உள்ளூர் மக்கள் வாக்கிங் செல்லும் பகுதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.இதேபோல் ரூ.45 லட்சம் செலவில் சக்கரை குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் சுற்றுச்சுவர்கள், படிகள் சீரமைக்கப்பட்டு, தடுப்பு சுவர் கட்டப்பட்டு சிவப்பு, வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளதால் சக்கரை குளம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.