நெல் சாகுபடி தீவிரமடையும் நிலையில் உரத்தட்டுப்பாடு தேவைக்கேற்ப விநியோகிக்க கோரிக்கை
ராஜபாளையம்: மாவட்டத்தில் நெல் நடவுக்கான பணிகள் தொடங்கிய நிலையில் உரங்களுக்கு தட்டுப்பாடு இன்றி தேவைக்கேற்ப விநியோகிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நடப்பு ராபி பருவத்தில் 25 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் பயிரும், 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிறு வகைகளும் 21 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி என மொத்தம் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளை வத்திராயிருப்பு, தலைமை சேத்துார், தேவதானம், ராஜபாளையம் பகுதி விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இப் பருவத்தில் தேவையான போதிய அளவு உரங்கள் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்க வேண்டும். அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறைந்தபட்சம் யூரியா, டி.ஏ.பி பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உரக்கடைகள் உரங்களை பதுக்கி வைத்து செயற்கையான கட்டுப்பாட்டை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் குறிப்பிட்ட உரங்களுக்கு சார்பு பொருட்களை வாங்க நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே 70 சதவீத உரங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே விற்பனை செய்வதுடன் உரத்தட்டுப்பாடு எழாதவாறு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.