உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாம்புகளின் கூடாரமான பள்ளி கழிப்பறை புதர்களை அப்புறப்படுத்த கோரிக்கை

பாம்புகளின் கூடாரமான பள்ளி கழிப்பறை புதர்களை அப்புறப்படுத்த கோரிக்கை

விருதுநகர்: விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி கழிப்பறை பகுதி புதர் மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக பணியாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை எதிரே செயல்படும் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள், பள்ளி அலுவலகம் மட்டுமின்றி தனியார் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், வட்டார வளமையம் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்குகின்றன.இப்பள்ளியில் உள்ள கழிப்பறைகள் முறையான பராமரிப்பின்றி புதர் மண்டி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக உள்ளதால் மாணவ மாணவிகள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உயிர் பயத்தில் பணிபுரிகின்றனர். குறிப்பாக பெண்கள் கழிப்பறை செல்லும் வழியில் இருபுறமும் குப்பை நிறைந்தும், கழிவுநீர் தேங்கியும் சுகாதார சீர்கேட்டுடன் உள்ளது.அதைக் கடந்து உள்ளே சென்றால் 2010--11ல் கட்டப்பட்ட செயல்படாத பாழடைந்த கழிப்பறை கட்டடம், அதனைச் சுற்றி முட்புதர்கள், குப்பை மேடுகள் சூழந்த இடத்தில் புதிய கழிப்பறை கட்டடம் உள்ளது. அங்கும் முறையாக சுத்தம் செய்யாமல் கழிவுநீர் தேங்கியும், கரையான் அரித்தும், கதவுகள் பெயர்ந்து துருபிடித்தும் காணப்படுகிறது. போதிய மின்விளக்கு வசதியில்லாததால் மாலையில் அங்கு அவசரத்திற்கு ஒதுங்கவே அஞ்சுகின்றனர்.சிலர் கண்களில் பாம்பு தென்பட்டதால் பகலிலும் அங்கு செல்ல பயந்து இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தீயணைப்பு துறையிடம் தகவல் தெரிவித்தாலும் அவர்கள் வருவதற்குள் பாம்புகள் புதர்களுக்குள் சென்று மறைந்து விடுகின்றன. இதனால் அவர்களும் பிடிக்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்.தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள் இல்லை என்றாலும் மற்ற அலுவலகங்கள் செயல்படுகின்றன. எனவே அனைவரின் நலன் கருதி பள்ளிக் கழிப்பறை, அதன் சுற்றுப்புறத்தை துாய்மைப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை