தெருக்களில் சேதமடைந்த ரோடு குடியிருப்புவாசிகள் அவதி
சிவகாசி: சிவகாசி மாநகராட்சி 48வது வார்டு ஜே நகரில் ஆறுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அனைத்து தெருக்களிலுமே ரோடு சேதம் அடைந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று தெருக்களில் மட்டும் புதிதாக ரோடு போடப்பட்டது. மற்ற தெருக்களில் இதுவரையிலும் ரோடு போடவில்லை. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அனைத்து ரோடுகளுமே சிதைந்து விட்டது. பெரிய பள்ளமாக ரோடு மாறிய நிலையில் சைக்கிள் டூ வீலர் கார் உள்ளிட்ட எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. மழைக்காலங்களில் வாகனங்கள் சகதியில் பதிந்து விடுகின்றது. மேலும் மழை பெய்தால் ரோடு போடாத தெருக்களில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுகின்றது. இப்பகுதி மக்கள் தங்களது டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பக்கத்து தெருவிலேயே நிறுத்தி வர வேண்டி உள்ளது. எனவே ஜே நகரில் சேதம் அடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் ரோடு போடாத தெருக்களில் புதிதாக ரோடு போட வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.