உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விலை உயரும் கட்டுமான பொருட்கள் வீடுகட்டுவோர், ஒப்பந்ததாரர்கள் தவிப்பு

விலை உயரும் கட்டுமான பொருட்கள் வீடுகட்டுவோர், ஒப்பந்ததாரர்கள் தவிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : தங்கத்தை போல் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு அதிகரித்து வருவதால் வீடு கட்டுபவர்கள், ஒப்பந்ததாரர்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் முடங்கி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சிமெண்ட், எம்.சாண்ட், ஜல்லி கற்கள், கிராவல், செங்கல், அரைத்த காரை உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களும் தங்கத்தின் விலை போல் நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.சிமெண்ட் மூடைகள் விலை ரூ. 290 லிருந்து ரூ. 370 , ஒன்றரை இன்ச் சல்லி ஒரு யூனிட் ரூ. 3800 லிருந்து ரூ. 4300, முக்கால் இன்ச் ஜல்லி ரூ. 2500 லிருந்து ரூ. 3500 வரையிலும், செங்கல் விலை ரூ 7லிருந்து ரூ. 9.50, ஒரு கிலோ கம்பிகள் விலை ரூ. 60லிருந்து ரூ. 75, எம்.சாண்ட் விலை ரூ 3500 லிருந்து ரூ. 5500 ஆகவும் அதிகரித்துள்ளது.இதனால் சதுர அடி வீதம் விலை பேசி ஒப்பந்தம் போட்டு வீடுகள், கடைகள், அலுவலகங்கள் உட்பட பல்வேறு கட்டுமான பணிகள், விலை உயர்வின் காரணமாக தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கட்டுமான தொழில்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஸ்ரீவில்லிபுத்துார் கட்டுமான பொறியாளர் நலச் சங்க தலைவர் சிவகுருநாதன் கூறுகையில்,கட்டுமான பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளதால் தொழில் முடக்கம் ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் தமிழக அரசு தலையிட்டு விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ