அகலமில்லாத ரோடால் விபத்து அபாயம்
ஸ்ரீவில்லிபுத்துார்: வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் விலக்கில் இருந்து கோட்டையூர் வரையுள்ள ரோடு குறுகலாகவும், கண்மாய் கரையில் தடுப்பு சுவர் இல்லாமலும் விபத்து அபாயம் காணப்படுகிறது. எனவே, இந்த ரோட்டை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுந்தரபாண்டியம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சுந்தர பாண்டியம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கிருஷ்ணன் கோவில், வத்திராயிருப்பு, கோட்டையூர் வழித்தடத்தில் பயணித்து வருகிறது. அரசு, தனியார் பஸ்கள் மட்டுமின்றி சிவகாசி பட்டாசு ஆலை பஸ்களும் தினமும் அதிகளவில் வந்து செல்கிறது.இந்நிலையில் வத்திராயிருப்பு விலக்கு ரோட்டில் இருந்து சுந்தர பாண்டியம், வைகுண்ட மூர்த்தி சுவாமி கோயில் வழியாக கோட்டையூர் விலக்கு வரை செல்லும் தார் ரோடு போதிய அகலமில்லாமலும், கண்மாய்கரைகளில் தடுப்பு சுவர் இல்லாமலும் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்து அபாயத்துடன் பயணித்து வருகிறது. எதிரும் புதிருமாக இரு வாகனங்கள் வரும்போது டூவீலரில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, வத்திராயிருப்பு விலக்கு ரோட்டில் இருந்து கோட்டையூர் விலக்கு வரை உள்ள ரோட்டினை அகலப்படுத்தவும், கண்மாய் கரையில் தடுப்பு சுவர்கள் அமைத்து பாதுகாப்பான பயணத்திற்கு உதவ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுந்தரபாண்டியம் பேரூராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.