முதல்வர் வருகைக்காக ரோடு பள்ளங்கள் சீரமைப்பு
ராஜபாளையம்: ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் முதல்வர் வருகைக்காக மரண குழி பள்ளங்கள் சீரமைக்கும் பணி இரவோடு இரவாக நடைபெற்றதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை புது பஸ் ஸ்டாண்ட் சொல்லும் சங்கரன்கோவில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிஇருந்தது. தற்போது பெய்த மழை மற்றும் தாமிரபரணி குடிநீர் குழாய், பாதாள சாக்கடை கழிவு நீர் கசிவினால் மேலும் சிக்கலானது. வாகன ஓட்டிகள் சாலையை செப்பனிடக்கோரி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பலரும் விபத்தில் சிக்கி வந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சாலை மார்க்கமாக மதுரை செல்கிறார். ராஜபாளையம் வழியே செல்ல உள்ள நிலையில் பல நாட்களாக சேதம் அடைந்து காணப்பட்ட சொக்கர் கோவில் அருகே, அரங்கசாமி ராஜா சிலை எதிரே, காந்தி கலை மன்றம் அருகே, பி.எஸ்.கே பார்க் எதிரே, காந்தி சிலை ரவுண்டானா, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் இருந்த மரண குழிகள் இரவோடு இரவாக சரி செய்யப்பட்டது. மகப்பேறு மருத்துவமனை அருகே தேங்கி இருந்த கழிவுநீர் வாய்க்கால் வெட்டி அகற்றும் பணி நடைபெறுகிறது. முதல்வர் வருகையால் சேதமடைந்த சாலைக்கு விடிவு கிடைத்துள்ளது குறித்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.