காரியாபட்டியில் மீண்டும் வழிப்பறி: மக்கள் அச்சம்
காரியாபட்டி; காரியாபட்டி பகுதியில் மீண்டும் நடந்து வரும் வழிப்பறிகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காரியாபட்டி பகுதியில் செயின் பறிப்பு, டூவீலர் திருட்டு அதிகம் நடந்து வந்தது. மற்ற பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் காரியாபட்டியில் பதுங்குவது, இந்த வழியாக தப்பிச் செல்வது தொடர் கதையாக இருந்தது. மக்கள் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு, கடுமையான நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தினர். ஓரளவிற்கு திருட்டு சம்பவங்கள் இல்லாமல் இருந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். நிம்மதி நீண்ட நாள் நீடிக்கவில்லை. நேற்று வேலைக்கு தனியாக டூவீலரில் சென்ற பெண் ஒருவரை, செவல்பட்டி பிரிவு ரோட்டில் வேகத்தடை அருகே மெதுவாக சென்றபோது, பின்னால் வந்த மர்ம நபர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்தார். சத்தம் போட்டதால், செயினை போட்டு விட்டு தப்பி ஓடினார். 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் இச்செயலில் ஈடுபட்டதாக பெண் தெரிவித்தார். காரியாபட்டி போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது. கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.