உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலர்களில் தொடரும் மணல் திருட்டு

டூவீலர்களில் தொடரும் மணல் திருட்டு

சேத்துார்: ராஜபாளையம் அருகே சேத்துாரில் டூவீலர்களில் ஆற்று மணலை கடத்தும் கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நீராதார பகுதிகள் மூலம் மேட்டுப்பட்டி, சோலைசேரி, முத்துசாமிபுரம் கிராமத்திற்கு உட்பட்ட 3000 ஏக்கரில் தென்னை மா வாழை கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு சாகுபடி நடைபெறுகிறது.சேத்துார் ஆதிபுத்திர கொண்ட அய்யனார் கோயில் அருகே இருந்து பிரக்குடி, ஆற்றுப்பகுதி வாழவந்தான் குளம், அய்யனார் கோயில், அசையா மணி உள்ளிட்ட பாதைகளில் டூவீலர்களின் மணல் திருட்டு நடந்து வருகிறது.தினசரி 20க்கும் அதிகமானோர் டூவீலர்களில் தலா 5 மூடைகள் வீதம் ஆற்று மணலை அள்ளிக்கொண்டு தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு கட்டடப்பணி நடைபெறும் பகுதிகளுக்கு மூடை 150 ரூபாய் என சப்ளை செய்கின்றனர். இது தவிர தனியார் இடங்களில் மொத்தமாக குவித்து டிராக்டர்கள் மூலம் சப்ளை நடக்கிறது. இதனால் நீர்வளம் பாதிப்பதுடன் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சேத்துார் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன்: பொறுப்பேற்று ஒரு நாள் தான் ஆகிறது. காலாவதியான டூவீலர்களை வைத்து குற்றச் செயல் நடைபெறுவது குறித்து ஒர்க்சாப் வைத்திருப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர கண்காணிப்பு கேமரா பொருத்தியும் செக் போஸ்ட்டை மீண்டும் செயல்படுத்தியும் தொடர் ரோந்து கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !