வேனில் கடத்திய ரூ.3 லட்சம் கருந்திரி பறிமுதல்: 5 பேர் கைது
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 3.25 லட்சம் கருந்திரிகளை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.அருப்புக்கோட்டையில் அரசு அனுமதி இன்றி கருந்திரி தயாரிக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சிவகாசி, தாயில்பட்டி பகுதியில் இருந்து திரி மருந்துகளை கொடுத்து கருந்திரி தயாரிக்கும் பணி சட்ட விரோதமாக நடந்து வருகிறது.நேற்று அதிகாலை 3:00மணிக்கு அருப்புக்கோட்டையில் மதுரை -- தூத்துக்குடி நான்கு வழி சாலை அருகே ஏ.எஸ்.பி., மதிவாணன் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 12 பண்டல்களில் 480 குரோஸ் ரூ.3.25லட்சம் மதிப்புள்ள கருந்திரிகளை கொண்டு சென்றது தெரிய வந்தது. கருந்திரிகளை கொண்டு சென்ற காயல்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், 32, ரமேஷ்குமார், 31, கார்த்திக், 30, காளி 27, மகேஷ்,32, ஆகிய 5 பேரை கைது செய்தனர்.