காரியாபட்டி அரசு மருத்துவமனையில் வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவு நீர்
காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் செப்டிக் டேங்க் கழிவு நீர் நீண்ட நாள்களாக வெளியேறுவதை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். இங்குள்ள கழிப்பறையிலிருந்து கழிவு நீர் வெளியேறி மருத்துவமனை வளாகத்திற்குள் ஓடுகிறது. துர்நாற்றம் ஏற்பட்டு, கொசு தொல்லை அதிகமாக உள்ளது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் முகம் சுளிக்கின்றனர். இப்பிரச்னை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அவ்வப்போது சுத்தம் செய்தாலும் ஒரு சில நாட்களிலேயே நிறைந்து, வெளியேறுவது, தொடர்கதையாக இருந்து வருகிறது. எனினும், நோய் தொற்று ஏற்படுமோ என்கிற அச்சத்தில் நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். செப்டிக் டேங்க் கழிவு நீர் மருத்துவமனை வளாகத்திற்குள் வெளியேறாத வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.