நரிக்குடி பகுதியில் தொடர் திருட்டு
நரிக்குடி; நரிக்குடி பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதால் இரவு நேர ரோந்து பணிகளை போலீசார் தீவிர படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி பகுதியில் சமீபகாலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. டாஸ்மாக் கடையில் கொள்ளை, மதுபாட்டில் திருட்டு, தனியாக செல்பவர்களை வழிமறித்து பறிப்பு, வாகனங்களில் சென்று ஆடுகளை திருடுவது, டூவீலர்கள் திருட்டு என அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். டாஸ்மாக் கடை ஊழியர்கள் இரவு 10:00 மணிக்கு மேல் தயக்கத்துடன் செல்கின்றனர். ஊழியர்கள் செல்லும் வழித்தடத்தை திருடர்கள் கண்காணித்து வழிப்பறி செய்கின்றனர். ஊழியர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். தோட்டங்களில் தனியாக வசிக்கும் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடுகளை திருடுகின்றனர்.பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. நரிக்குடி பகுதி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட எல்கையை ஒட்டி உள்ளது. மற்ற மாவட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள், நரிக்குடி வழியாக மற்ற ஊர்களுக்கு எளிதில் தப்பி செல்கின்றனர். சில சமயங்களில் நரிக்குடி பகுதிகளில் பாதுகாப்பாக தங்கி விடுகின்றனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் கண்ணில் மண்ணை தூவி திருட்டு சம்பவத்தை செய்கின்றனர். இருந்தாலும் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.