நிரம்பியது சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்
சேத்துார: சேத்துார் அடுத்த தேவதானம் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவதானத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சாஸ்தா கோயில் ரோட்டில் அமைந்துள்ளது சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம். நகரி ஆற்றில் தண்ணீர் தேக்கி முறைப்படுத்த அமைக்கப்பட்ட நீர் தேக்கத்தில் மொத்த உயரமான 33 அடி வரை தண்ணீர் பெருகி தற்போது மறுகால் பாய்ந்து வருகிறது.மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக நீர்த்தேக்கத்தை நம்பியுள்ள நகர குளம், பெரியகுளம், வாண்டையார் குளம், முகவூர் கண்மாய் உள்ளிட்ட பல ஆயிரம் ஏக்கர் நெல் பாசன பகுதிகள் இதனால் பயன் பெற்று வருகின்றன.தற்போது சுற்றுப்பகுதிகளில் சாகுபடி வேகம் எடுத்துள்ள நிலையில் கிணற்று பாசன நீரை கொண்டு சமாளித்து வருகின்றனர். அதிக தண்ணீர் தேவைப்படும் நேரம் நீர் தேக்கமும் நிறைந்து வழிவதால் விவசாயத்திற்கு பிரச்சனை இல்லை என மகிழ்ச்சியில் உள்ளனர்.