அன்புடன் அதிகாரி/ தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் 8831 மாணவர்கள் பயன்
கே.திலகம் மாவட்ட சமூக நல அலுவலர், விருதுநகர். * தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தில் கடந்த ஓராண்டாக பயன்பெற்று வருவோர் எண்ணிக்கை? வழங்கப்பட்ட மொத்த தொகை? 2024-25ம் ஆண்டில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 4429 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதில் இதுவரை ரூ.44 .29 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் 4402 மாணவிகளுக்கு ரூ.44 லட்சத்து 02 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. * குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம் துறை என்னென்ன செய்கிறது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரடியாக புகார் மனு பெற்று அவற்றை விசாரித்து அப்பெண் வசிக்கும் இடத்திலுள் நீதிமன்றத்திலேயே வழக்கு பதிந்து தரப்படுகிறது. இவ்வழக்கில் ஆணை பிறப்பித்தால் பாதுகாப்பு அலுவலர் மூலம் செயல்படுத்தி தருகிறோம். * எத்தனை குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன 2025 ஜன. முதல் ஆக. வரை 55 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. * ஊரகப் பகுதிகளில் நிலவும் குழந்தை திருமணத்தை தடுக்க தங்கள் அறிவுரை விழிப்புணர்வு மூலமாக ஊரக பகுதிகளில் நிலவும் குழந்தை திருமணங்களை தடுக்க முடியும். சமூக நலத்துறை, போலீஸ் துறை, சட்டதுறை என பல துறைகள் இணைந்து தொடர்ந்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. * பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டதா. எத்தனை பேருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது. 2024-25ம் நிதியாண்டில் 1315 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 28 ஆயிரத்து 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. * மகளிர் நல வாரியத்தில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 320 பேர் மகளிர் நல வாரியத்தின் மூலம் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், முதிர் கன்னிகள் அடங்குவர். * இந்த வாரியம் மூலம் என்னென்ன உதவிகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் திறன் பயிற்சி, சுய தொழில் துவங்க மகளிருக்கு மானியம் வழங்கப்படுகிறது. * வேறு திட்டங்கள் பற்றி சத்தியவாணி முத்தம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர்.தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம், திருநங்கைகளுக்கான மாத ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. * சகி சேவை மையத்தில் உளவியல் ஆலோசனை பெறலாமா பெண்கள் பாதிக்கப்பட்டு நிராதரவாக நிற்பது போன்ற கைவிடப்பட்ட யாருமே இல்லாத தனிமையான சூழலில் சகி சேவை மையத்தை 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இங்கு உளவியல் ஆலோசனையும் வழங்கப்படும்.