குடிநீர் குழாய் பணிகள் முடிஞ்சாச்சு எப்ப சார் ரோடு சரி பண்ணுவீங்க
விருதுநகர்: விருதுநகர் அருகே வெள்ளூரில் குடிநீர் குழாய் பணிகள் முடிந்தும் பேவர் பிளாக் கற்கள் ரோடு சீரமைக்கப்படாமல் அதே கற்களால் ரோடு மறிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்ல முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். விருதுநகர் அருகே வெள்ளூரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளும், சேதமானவற்றை சீரமைக்கும் பணிகளும் நடந்தது. இதில் புதிதாக குழாய் அமைக்க பேவர் பிளாக் கற்கள் ரோட்டில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு தோண்டி மண் மீது வைக்கப்பட்டு ரோடு மறிக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்தும் தற்போது வரை மண்ணை கொட்டி கற்களை பொருத்தும் பணிகள் நடக்கவில்லை. இதனால் ரோட்டை கடந்து வாகனங்களில் செல்ல முடியாமல் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தினசரி வேலைக்கு சென்று வருபவர்கள் சிரமப்படுகின்றனர். இரவில் பணி முடித்து டூவீலர், நடந்து வருபவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். வயதானவர்கள் கால் இடறி விழுந்து படுகாயம் அடையும் அபாயம் உள்ளது. இது குறித்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வெள்ளூரில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோட்டை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.