மீண்டும் மண் திருட்டு: ஸ்ரீவி.,யில் அதிகரிப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் மண் திருட்டு நடப்பதால் அதனை தடுக்க போலீஸ், வருவாய்த்துறை நடவடிக்கை அவசியம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி களான மம்சாபுரம், செண்பகத் தோப்பு, திருவண்ணாமலை, பந்தப்பாறை, ரெங்கர்தீர்த்தம் பகுதி அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்வரத்து ஓடைகள், நீர் ஆதார பகுதிகளிலிருந்து மண் திருட்டு அடிக்கடி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக மண் திருட்டு தடைபட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் மண் திருட்டு ஏற்பட துவங்கியுள்ளது. இரவு நேரங்களில் மலையடிவார பகுதியில் இருந்து டிராக்டர்களில் மண் அள்ளிக் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று கூட திருவண்ணாமலை பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளி கொண்டு வந்த ஒரு டிராக்டரை வருவாய்த்துறையினர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எனவே, மீண்டும் நடக்கும் மண் கடத்தலை முழு அளவில் தடுக்க போலீஸ், வருவாய்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.