விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை முழுமையாக தடை செய்ய வேண்டும்
சிவகாசி: விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை முழுமையாக தடை செய்ய வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன், செயலாளர் சடையப்பன் கூறியதாவது:2024 டிச. 24 முதல் 2025 ஜன. 1 வரை பள்ளிகள் அனைத்திற்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விடுமுறை அளித்துள்ள நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்துவது பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் உத்தரவை மீறிய செயல். எனவே விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை முழுமையாக தடை செய்ய வேண்டும்.மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்கி எழுதிய விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியதை பார்த்த பின்னரே மதிப்பெண்களை பதிவேற்றம் செய்வது வழக்கம். தற்போது இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதால் மதிப்பெண்களை பதிவேற்றும் பணியினை ஜன. 2 ம் தேதி மதியத்திற்கு மேல் செய்வதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது மாணவர்களுக்கு முக்கிய பாடப்பகுதிகளை மீண்டும் நினைவூட்டல் செய்த பின்னரே திருப்புதல் தேர்வு வைத்தால் மட்டுமே மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்வு எழுதுவார்கள். மாறாக அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தவுடன் திருப்புதல் தேர்வு வைத்தால் அவர்கள் அதனை சம்பிரதாயத்திற்காக மட்டுமே எழுதுவார்கள்.அதனால் எந்த பலனும் கிடைக்காது என்பதை நினைவில் கொண்டு மாணவர்களுக்கு திருப்புதல் செய்ய ஒரு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும். திருப்புதல் தேர்வு கால அட்டவணையில் ஒவ்வொரு பாடங்களுக்கும் இடையே சமமான இடைவெளி இல்லாமல் உள்ளது.மாணவர்கள் படிப்பதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் ஏதுவாக நாட்கள் இருந்தால் அனைத்து பாடங்களிலும் சிறந்த முறையில் மாணவர்கள் மன உளைச்சல் இன்றி பயிற்சி பெற்று சிறப்புடன் தேர்வு எழுத திருப்புதல் தேர்வு கால அட்டவணை அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதல் திருப்புதல் தேர்வுக்கு பாடத்திட்டம் அனைத்து பாடப்பகுதியும் அமையுமாறு மாதிரி பொதுத் தேர்வு போன்று திருப்புதல் தேர்வு வினாத்தாள் அமைப்பு இருக்க வேண்டும்.என்றனர்.