விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் வழங்கல்
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் மூச்சுதிணறல், ஆஸ்துமா பாதிப்புக்கான சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் கடந்த மூன்று மாதங்களாக கிடைக்காமல் இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் நவ. 7ல் செய்தி வெளியானதை அடுத்து தற்போது சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் நோயாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் நுரையீரல், சுவாசப்பாதிப்புக்கான வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவில் தினசரி 100க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பாதிப்பை பொறுத்து உள்நோயாளியாகவும், வெளிநோயாளிகளுக்கு பத்து நாட்கள் வரை மாத்திரை, இன்ஹேலர் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரையில் வழங்குகின்றனர். மேலும் நோயாளிகளின் பாதிப்பு தன்மைக்கு ஏற்பவும், உடல் நலத்திற்கு ஒத்து போகும் சிறப்பு இன்ஹேலர் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் மருந்துகளை கொள்முதல் செய்து வழங்கும் மருத்துவ சேவைகள் கழகம் சிறப்பு இன்ஹேலர் மருந்துகளை தேவையை விட குறைவாக தொடர்ந்து வழங்கி வந்தது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து நவ.7ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சிறப்பு இன்ஹேலர் மருந்துகள் உடனடியாக மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு நோயாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.