ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வசந்த உற்ஸவம் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நேற்று முதல் கோடை வசந்த உற்ஸவம் துவங்கியது.இக்கோயிலில் ஆண்டு தோறும் அக்னி நட்சத்திரம் துவக்கத்தை முன்னிட்டு கோடை வெப்பம் தணிய வேண்டி 10 நாட்கள் வசந்த உற்ஸவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நேற்று (மே 3) முதல் துவங்கி மே 12 வரை வசந்த உற்ஸவம் நடக்கிறது.நேற்று காலை 10:00 மணிக்குமேல் ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் மாலை 6:00 மணிக்கு நீராழி மண்டபத்தில் வசந்த உற்ஸவம் நடந்தது. அப்போது ஆண்டாள், ரெங்க மன்னார் திருமேனி முழுவதும் சந்தனம் பூசி மலர் மாலை சூடி காட்சியளித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நிறைவு நாளான மே 12 சித்ரா பவுர்ணமி வரை தினமும் காலையில் கோயிலில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் நீராழி மண்டபத்தில் வசந்த உற்ஸவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.