ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் மலையேற்ற திட்டம் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் இருந்து வ.புதுப்பட்டி வரை 9 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றம் செல்வதற்கான திட்டம் துவக்கப்பட்டுள்ளதால் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் 40 மலை வழித்தடங்களில் மலையேற்றம் செல்லும் திட்டத்தை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.இதற்காக ஒவ்வொரு மலை வழித்தடத்தில் ட்ரெக்கிங் அழைத்துச் செல்ல வழிகாட்டிகள் குழுவினர் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான சீருடைகள், மலையேற்ற காலணிகள், முதுகுப்பை, முதலுதவி பெட்டிகள், தண்ணீர் பாட்டில், வெந்நீர் பிளாஸ்க், மலையேற்ற தகவல் தொடர்பு சாதனங்கள், விசில் மற்றும் திசை காட்டி கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.மலையேற்றத்திற்கு இணைய வழியாக முன்பதிவு செய்வதற்கு ஒரு வலைதளம் துவக்கப்பட்டுள்ளது. டிரக்கிங் செல்ல விருப்பமுள்ளவர்கள் அதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பிலிருந்து வத்திராயிருப்பு தாலுகா வ. புதுப்பட்டி வரை 9 கிலோ மீட்டர் தூரம் மலையில், 4 மணி நேரத்தில் டிரக்கிங் அழைத்துச் செல்லும் ஒரு வழித்தடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதன்படி செண்பகத் தோப்பில் இருந்து புறப்பட்டு புதுப்பட்டியை சென்று அடைபவர்கள் அங்கிருந்து வனத்துறை வேன் மூலம் மீண்டும் செண்பகத் தோப்பிற்கு அழைத்து வரப்படுவார்கள். இதற்குரிய கட்டண விபரங்கள் ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள், வன ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.