சத்துணவு பணிக்காலத்தையும் சேர்த்து பழைய ஓய்வூதியத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும் மேற்பார்வையாளர் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்
விருதுநகர்:''சத்துணவு பணிக்காலத்தை நிரந்தர பணிக்காலத்துடன் கணக்கிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும்,'' என, விருதுநகரில் தமிழ்நாடு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்க மாநில தலைவர் ஆர்.சங்கர் பாபு வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது: சமூகநலத்துறையின் மூலம் பள்ளி சத்துணவுத்திட்டம், அங்கன்வாடி மையங்களில் ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர்கள், ஊட்டச்சத்து மேற்பார்வையாளர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் 1982ல் நியமிக்கப்பட்டனர். 2003 ஏப்., 1க்கு பிறகு புதிய ஓய்வூதியம் செயல்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு பின் ஆசிரியர்கள் சிறப்பு தேர்வு எழுதி நிரந்தரமாக்கப்பட்டனர். அதே போல் அங்கன்வாடியில் பணிபுரிந்து வந்த மகளிர் ஊர் நல அலுவலர்கள், ஊட்டச்சத்து மேற்பார்வையாளர்கள் பணிமூப்பு அடிப்படையில் நிரந்தர பணிக்கு நியமிக்கப்பட்டனர். தற்போது நாங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தான் உள்ளோம். 2003க்கு முன்பிருந்தே நாங்கள் பணிபுரிந்து வந்துள்ளோம். எனவே முன்பு பணியாற்றிய சத்துணவு பணிக்காலத்தை அரசின் நிரந்தர பணிக்காலத்துடன் இணைத்து கணக்கிட்டு எங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.மேலும் குடும்ப ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, பணிக்கொடை ஆகியவை வழங்கிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் தி.மு.க., அரசு இதுகுறித்து வாக்குறுதியும் அளித்துள்ளது. ஆனால் தற்போது வரை நிறைவேற்றவில்லை. விரைந்து எங்கள் கோரிக்கைகளுக்கு பரிசீலித்து பழைய ஓய்வூதியத்திட்டத்தையும், பணிக்கொடை, மருத்துவக்காப்பீட்டையும் செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 2025 மார்ச்சில் சமூகநலத்துறை ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றார்.