சமணர் சிலைகளை கள ஆய்வு செய்த மாணவர்கள்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன மேல்நிலைபள்ளி தொல்லியல் மன்றம் சார்பாக மாணவர்கள் சமணர் சிற்பங்களை பார்வையிட்டனர்.அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம், மணவராயநேந்தல் கிராமங்களுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் ஆறுமுக பெருமாள், மாருதி தங்கம், சோமசுந்தரம், பாண்டியநாடு பண்பாட்டு மையத் தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோருடன் சென்று சமணர் கால சிலைகளை பார்வையிட்டனர். கோவிலாங்குளத்தில் 3 மகாவீரர் சிலைகள் உள்ளன. ஒன்று கி.பி., 7ம் நுாற்றாண்டு, மற்ற இரண்டும் 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது.இந்தச் சிற்பம் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளது. 10 ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பத்தில் முக்கூடை, பிரபாவழி, பிண்டி மரம், சிம்ம திண்டு, சாமரதாரிகளுடன் உள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் தனது 48 வது ஆட்சி ஆண்டில் சமணர்களுக்கு ஒரு கோயில் கட்டி கொடுத்ததாகவும், இந்த ஊர் வெண்பு நாட்டு செங்காட்டிருக்கை கும்பனூரான குணகனாபரண நல்லுார் என்ற பெயரில் வழங்கி வந்துள்ளது. என, கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.மாணவர்கள் சிற்பங்களை பார்த்து அரிய தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டனர்.