மழையால் கரும்பு பயிர்கள் சேதம்
காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் மாற்று விவசாயமாக கரும்பு பயிரிட்டனர். மழைக்கு சேதம் அடைந்ததால் வேதனை அடைந்தனர். காரியாபட்டி சித்தனேந்தல், தேனூர், சொக்கனேந்தல், எஸ். மறைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெங்காயம், கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன. இந்த ஆண்டு மாற்று பயிராக விவசாயிகள் கரும்பு பயிரிட்டனர். இந்நிலையில் புயல் காரணமாக கனமழை பெய்தது. நன்கு வளர்ந்த நிலையில் கரும்பு பயிர்கள் மழைக்கு சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.வெள்ளைச்சாமி, விவசாயி: இப்பகுதியில் தோட்ட விவசாயம், மானாவாரி விவசாயத்தில் கடலை, வெங்காயம் அதிக அளவில் பயிரிட்டு வந்தோம். இந்த ஆண்டு மாற்று ஏற்பாடாக கரும்பு பயிரிட்டோம். நன்கு வளர்ந்து ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கனமழை காரணமாக கரும்பு சேதம் அடைந்தது. முற்றிலும் சாய்ந்தது. கடன் வாங்கி விவசாயம் செய்தோம். கை கொடுக்கும் நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் வேதனையாக உள்ளது. அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.