உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கால்வாயில் தேங்கும் கழிவு நீர் , படுமோசமான ரோடு; சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்

கால்வாயில் தேங்கும் கழிவு நீர் , படுமோசமான ரோடு; சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்

காரியாபட்டி, : காரியாபட்டியில் சக்தி மாரியம்மன் கோயில் அருகே செல்லும் வரத்துக் கால்வாயில் குப்பை நிறைந்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம், படுமோசமான செவல்பட்டி ரோடு, திறக்காத மின் மயானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். காரியாபட்டி பேரூராட்சியில் சக்தி மாரியம்மன் கோயில் அருகே வரத்து கால்வாய் உள்ளது. காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் வரத்து கால்வாய் வழியாக வந்து கே.கரிசல்குளம் கண்மாய்க்கு செல்லும். ஆங்காங்கே ஆக்கிரமிப்புகளால் வரத்து கால்வாய் காணாமல் போனது. இருக்கிற வரத்து கால்வாயிலும் குப்பை நிறைந்து, கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. செவல்பட்டி வழியாக செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் பாலம் வேலை நடைபெற்று வருவதால் இந்த ரோட்டை தற்காலிக மாற்றுப் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. செவல்பட்டி காலனி அருகே புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. மின் மயானம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராததால் சிரமத்தில் உள்ளனர்.

மின் ம யா னத்தை திறக்க வேண்டும்

திருமலை, தனியார் ஊழியர்: அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தும், மக்கள் பயன்பாட்டிற்கு வராதது வருத்தம் அளிக்கிறது. காரியாபட்டியில் கட்டப்பட்ட மின் மயானம் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதர் மண்டிய ரோட்டோரம்

பாலமுருகன், தனியார் ஊழியர்: செவல்பட்டி காலனி அருகே ரோட்டோரத்தில் புதர் மண்டி கிடக்கிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. கோர்ட்டுக்கு வருபவர்கள் விஷ பூச்சிகளின் நடமாட்டத்தால் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதி அசுத்தமாக கிடக்கிறது. தூய்மைப்படுத்தி சுகாதாரமாக வைக்க வேண்டும். செவல்பட்டி கண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாயில் குப்பை கொட்டப்பட்டு, கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அப்புறப்படுத்த வேண்டும்.

மோசமான ரோடு

கண்ணன், தனியார் ஊழியர்: கள்ளிக்குடி ரோட்டில் இருந்து மயானம், செவல்பட்டி வழியாக தார் ரோடு போடப்பட்டது. தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் சென்றுவர முடியாத அளவிற்கு உள்ளது. தற்போது மாற்று பாதையாக பயன்படுத்தி வருவதால் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. படு மோசமாக இருப்பதால் குலுங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ