| ADDED : டிச 03, 2025 05:04 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியில் உள்ள தாலுகா தலைமை நுாலகம் புதிய கட்டுமான பணிக்காக மூடப்பட்டு மாதக்கணக்கில் முடங்கி உள்ளது. இதனால் வாசகர்கள் போட்டி தேர்வாளர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளே தாலுகா தலைமை நுாலகம் அமைந்துள்ளது. நகரின் நடுப்பகுதியில் 1975ம் ஆண்டு துவக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான நுால்களும், மாத தினசரி இதழ்கள் 50க்கும் அதிகமாக உள்ளதுடன் 2000க்கும் அதிகமான உறுப்பினர்களும் 300-க்கும் மேற்பட்ட புரவலர்கள், பெரும் புலவர், கொடையாளர் உள்ளிட்டோர் உள்ளனர். கொரோனா காலத்திலும் போட்டி தேர்வுக்கு மாணவர்கள் நுாலகத்தை உபயோகித்து போட்டி தேர்வுகளில் பங்கேற்று வந்தனர். இந்நிலையில் நாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட கனிமவள நிதியின் கீழ் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை அடுத்து தற்காலிகமாக தென்காசி ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றப்பட்டது. ஆறு மாதங்கள் கடந்தும் பழைய கட்டடத்தை அகற்றும் பணியும் தொடங்கவில்லை. நகர் நடுவே வாசகர்கள் வந்து சென்ற நிலையில் நகரின் கடைசி பகுதியில் மாற்றி விட்டதால் கூட்டம் அதிகம் இல்லை. அத்துடன் மாணவர்கள், போட்டித் தேர்வாளர்கள், வாசகர்கள் சுலபமாக அணுக முடியவில்லை. சேதமடைந்த நுாலக கட்டடத்தை அகற்றும் பணியை விரைந்து தொடங்கி பணிகளை முடிக்க வேண்டும் என்பதே வாசகர்களின் கோரிக்கையாக உள்ளது.