சிவகாசியில் ஒத்த புலி ரோட்டில் விழுந்த டேங்கர்
சிவகாசி: சிவகாசி ஒத்த புலி விலக்கில் இருந்து லட்சுமியாபுரம் செல்லும் ரோடு சேதம் அடைந்த நிலையில் டிராக்டரில் ஏற்றி வந்த டேங்கர் கீழே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சிவகாசி ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றது. இதனால் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையான ஒத்த புலி விலக்கு, லட்சுமியாபுரம், ஆனையூர் ரோட்டில் சென்று வருகின்றன. இந்த மூன்று கிலோமீட்டர் துாரமுள்ள ரோடு மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதில் வீலரில் சொல்பவர்களே எதிரெதிரே விலகிச் செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகின்றது.இந்நிலையில் நேற்று காலை 7:30 மணி அளவில் தண்ணீர் டேங்கரை டிராக்டரில் ஏற்றி இந்த ரோட்டில் வரும் போது டேங்கர் கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வேறு வாகனம் வராததால் வேறு அசம்பாவிதம் ஏற்படவில்லை. நடுரோட்டில் டேங்கர் விழுந்ததால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன்பு இதே ரோட்டில் வந்த தனியார் பஸ்சில் டயர் தனியாக கழன்றது. எனவே இப்பகுதியில் ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.