தாமிரபரணி திட்ட பணிகள் நுாறு சதவீதம் நிறைவு பழைய இணைப்பு வினியோகத்தால் பாதிப்பு
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் மானுார் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தினசரி 34 லட்சம் லிட்டரும், வெம்பக்கோட்டை அணை மூலம் 21 லட்சம் லிட்டரும், உள்ளூர் நீரதாரங்கள் மூலம் 28 லட்சம் லிட்டர் என நாள் ஒன்றுக்கு 80 லட்சம் லிட்டருக்கு மேல் குடிநீர் கிடைக்கிறது. இதன் மூலம் மாநகராட்சியில் உள்ள 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் வீதம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.சிவகாசி மாநகராட்சியின் எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2018ல் ரூ.170 கோடியில் தாமிரபரணி குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சி 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 370 தெருக்களில் 191 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, 38,630 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் மீட்டர் பொருத்தப்பட்டது.இத்திட்ட குடிநீர் வினியோகத்தை 2023 மே மாதத்தில் அமைச்சர்கள் துவங்கி வைத்தனர். இத்திட்டத்தின் கீழ் தற்போது சிவகாசி மாநகராட்சிக்கு தினசரி 80 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சோதனை ஓட்டம் முடிந்த நிலையில் மொத்தம் உள்ள 25 மண்டலங்களில் 8 மண்டலங்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள பகுதிகள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. புதிய தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்காக வழங்கப்பட்ட இணைப்புகள் பயன்பாட்டிற்கு வந்தால் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவது தடுக்கப்பட்டு, மீட்டர் மூலம் அளவீடு செய்யப்படுவதால் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.ஆனால் அனைத்து வீடுகளுக்கும் புதிய திட்டத்தின் இணைப்பு வழங்கப்பட்ட பின்னும், பழைய இணைப்புகள் மூலமாகவே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. விடுபட்ட பகுதிகளுக்கும் இணைப்பு வழங்கி தாமிரபரணி குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.