குப்பையை எரித்து மரக்கன்றுகளை சேதம் செய்யும் கொடூரம் காற்று மாசுக்கும், சூற்றுச்சூழல் கேட்டிற்கும் வழி
விருதுநகர்: விருதுநகரில் நான்கு வழிச்சாலை ஓரங்களில் குப்பையை எரிப்பதால் பசுமை வழிச்சாலைக்காக நட்ட மரக்கன்றுக் பொசுங்கி சேதமாகின்றன. இந்த கொடூரத்தால் காற்று மாசு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் கேட்டிற்கும் வழியாகிறது.விருதுநகரில் நான்குவழிச்சாலை சிவகாசி பிரிவு சர்வீஸ் ரோட்டில் குப்பை, கட்டட கழிவுகள் கொட்டுவது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து தொடர் புகார் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் கட்டுப்படுத்த முயற்சித்தாலும், நகர், ஊரக பகுதிகளில் இருந்து யாரேனும் வந்து குப்பையை கொட்டி செல்கின்றனர்.இதை அவர்களோ அல்லது வேறு நபர்களோ எரித்து விடுகின்றனர். பெரும்பாலான மரக்கன்றுகள் நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் ரோட்டின் ஓரங்களில் தான் உள்ளன. குப்பை கொட்டும் பகுதியிலும் அவ்வாறு தான் உள்ளது.எரிந்த குப்பையால் அருகே கூண்டில் இருந்த மரக்கன்றுகளும் பொசுங்கிவிட்டன. மேலும் புகையால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். 50 அடி உயரத்திற்கு எழும்பி புகை வீசியது. நாற்றம் அடித்தது. இந்த பகுதியில் தான் குப்பையை கொட்டி எரிக்கக் கூடாது என்ற பலகையும் உள்ளது.எனவே குப்பையை கொட்டி எரிப்பதை நிறுத்த வேண்டும். இதற்கு இப்பகுதியில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி அபராத நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே தீர்வு ஏற்படும். கருகிய மரக்கன்றுகளை அகற்றி விட்டு புதிய மரக்கன்றுகளை நட வேண்டும்.