மாவட்டத்தின் கடன் திட்ட இலக்கு ரூ.32 ஆயிரம் கோடி
விருதுநகர்:விருதுநகரில் 2025--26ம் நிதியாண்டிற்கான ரூ.32 ஆயிரத்து 19 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்டார். மாவட்டத்தில் வங்கிகளுக்கான 2025--26 நிதியாண்டிற்கான கடன் திட்ட இலக்கு நிர்ணயித்து கலெக்டரால் வெளியிடப்பட்டது. இந்த நிதியாண்டின் கடன் இலக்காக ரூபாய் 32 ஆயிரத்து 19 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னுரிமை கடன்களுக்கான இலக்காக ரூ.20 ஆயிரத்து 475.91 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் இலக்கானது கடந்த நிதியாண்டின் இலக்கை விட ரூபாய் 2846.76 கோடி அதிகம். இதில் விவசாய கடனுக்காக ரூ. 13 ஆயிரத்து 290.90 கோடியும், தொழில் வளர்ச்சிக்காக ரூ.6 ஆயிரத்து 582.97 கோடியும், கல்விக் கடனாக ரூ.38.11 கோடியும், வீட்டுக் கடனாக ரூ.204.11 கோடியும், சமூக கட்டமைப்பு கடனாக ரூ.1.40 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கடனாக ரூ.3.47 கோடியும், நலிவடைந்தோர் வளர்ச்சி கடனாக ரூபாய் 8 ஆயிரத்து 556.01 கோடியும், பிற முன்னுரிமை கடனாக ரூபாய் 319.79 கோடியும், மற்ற கடன்களாக ரூபாய் 11 ஆயிரத்து543.62 கோடியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை கடன் வழங்கும் விழா மாவட்ட அளவில் நடத்தப்படும். சரியாக செயல்படாத வங்கிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார். திட்ட இயக்குனர் தண்டபாணி, இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் தர்மராஜ், மாவட்ட நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் அனுசுயா எலிசபெத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.