தொடர்ந்து பின்னுக்கு போகும் விருதுநகர் மாவட்ட கல்வி நிலை கானல் நீராகும் முதலிட கனவு
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் பிளஸ் 2 தேர்ச்சியில் 27 முறை முதலிடம் பிடித்தது. சில ஆண்டுகளாக முதலிடத்தை பிடிப்பது கானல் நீராகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்தது. 2013--14, 2015--16 ஆண்டுகளில் மட்டும் 3வது இடம், 2019--20ல் 7வது இடம் 2020--21ல் 4வது இடம், 2021--22ல் 2வது இடம் பிடித்தது. மற்ற ஆண்டுகளில் 27 முறை முதலிடம் பிடித்துள்ளது.2018 முதலே தேர்ச்சியில் முதலிடம் பிடிக்க முடியாதது கல்வித்துறையின் மீது விமர்சனங்களை எழுப்பி வந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து 2022--23 கல்வியாண்டில், 97.85 சதவீதம் எடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடம் பிடித்தது. அதன் பிறகு 2023-24ல் 6வது இடமும், 2024-25ல் தற்போது 7வது இடமும் பிடித்துள்ளது. காரணம் என்ன
கடந்த ஓராண்டில் மட்டும் அடுத்தடுத்து இரு முதன்மை கல்வி அலுவலர்கள் மாறியுள்ளனர். இது கற்பித்தல் கண்காணிப்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்திவிட்டது. தற்போதைய முதன்மை கல்வி அலுவலர் அக்டோபரில் தான் வந்தார். மேலும் மாணவிகளை விட மாணவர்கள் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைகிறது. இதனால் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது. மீண்டும் விருதுநகர் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கல்வித்துறை முனைப்பு காட்ட வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.