உள்ளூர் செய்திகள்

இடம் மாறுது

மாவட்டத்தில் தற்போது சிவகாசி, சாத்தூர், வெம்பகோட்டை தாலுகா உட்பட்ட நகர் மற்றும் கிராம பகுதியில் ஏராளமான அரசு அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களும் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் தொடரும் பட்டாசு ஆலை விதிமீறல்களால் விபத்துக்கள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். இது குறித்து வருவாய்துறையினர், போலீசார் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், அதனையும் மீறி எவ்வித அரசு அனுமதி இன்றி கிராமங்களில் தனி நபர்கள் அதிக வருவாய் ஈட்டுவது மட்டுமே நோக்கமாக கொண்டு கள்ளத்தனமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையும் போலீசார் , வருவாய்த்துறை அதிகாரிகள் பிடித்தாலும் விதிமீறல்கள் தொடர்கிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் ,வத்திராயிருப்பு தாலுகாவிற்கு இடைப்பட்ட குக்கிராமங்களில் அரசு அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்கும் நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது .கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூனம்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர்களை போலீசார், வருவாய்த் துறையினர் கண்டுபிடித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வத்திராயிருப்பு சேது நாராயணபுரம் மலையடிவார மாந்தோப்பில் அனுமதி இன்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தற்போது மல்லி, கிருஷ்ணன் கோவில், நத்தம் பட்டி ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பட்டாசு ஆலைகள் உள்ளது. போதிய போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமங்களில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பு இல்லாததால் இப்பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் சூழல் உருவாகி வருகிறது.இதனை தடுக்க போலீசார், வருவாய்த் துறையினர் குக்கிராமங்களில் தீவிர கண்காணிப்பு செய்வது அவசியமாகும். குறிப்பாக இரவு நேரங்களில் கிராமப்புற ரோடுகளில் பயணிக்கும் வாகனங்களை சோதனை செய்வது அவசியமாகிறது. இதற்காக அனைத்து குக்கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதனை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கண்காணிக்கும் சூழலை மாவட்ட போலீஸ் நிர்வாகம் , வருவாய்த்துறையினர் மேற்கொள்ள வேண்டும். அனுமதி இன்றி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை