வெம்பக்கோட்டையில் பஸ் வசதி இல்லை
சிவகாசி: வெம்பக்கோட்டை சுற்று கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள், மக்கள் அவதிப்படுகின்றனர். வெம்பக்கோட்டை சுற்று கிராமங்களான விஜய கரிசல் குளம், வன மூர்த்தி லிங்கபுரம், கோமாளிப்பட்டி, கண்டியாபுரம், எழுவன் பச்சேரி இனாம் மீனாட்சிபுரம் விளாம்பரத்துப்பட்டி, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக வெம்பக்கோட்டை உள்ளது. இக்கிராமங்கள் அனைத்துமே வெம்பக்கோட்டையை சுற்றிலும் 3 கி.மீ, முதல் எட்டு கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது. இந்த கிராமங்களுக்கு இதுவரையில் அரசு பஸ் வசதி இல்லை. இக்கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் வெம்பக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து வர வேண்டி உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் கட்டணம் செலுத்தி வர வசதியின்றி நடந்தே வருகின்றனர். எனவே வெம்பக்கோட்டையில் இருந்து சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு, அரசு பஸ்கள், மினி பஸ்கள் இயக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.