ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் பதித்தும் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் இல்லை
சிவகாசி: சிவகாசி அருகே தேவர் குளம் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டும் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படாமல் குடிநீர் வினியோகம் செய்யாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி அருகே தேவர் குளம் ஊராட்சி சக்தி நகர், அம்மன் நகர் பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஆண்டிற்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். ஆனால் குழாய் பதிக்கப்பட்ட பின்னர் வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்காமல் அப்பகுதியினருக்கு இதுவரையிலும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தற்போது வரையிலும் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். தினமும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக குழாய் இணைப்பு கொடுத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.