அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் டாக்டர் இல்லை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் தனியார் லேப்களில் ஆயிர கணக்கில் செலவழிக்க வேண்டியநிலையில் உள்ளனர்.அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தேசிய தர சான்று பெற்றது. இங்கு 3 மாவட்ட எல்லை ஓர கிராமங்களில் இருந்து சிகிச்சை பெற வருவர். கர்ப்பிணிகளுக்கு இங்கு தரமான சிகிச்சை அளிப்பதால் இங்கு விரும்பி வருவர். 2023ல், மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அனைத்து வசதிகளும் உள்ள இந்த மருத்துவமனையில் அல்ட்ரா ஸ்கேன் செய்ய டாக்டர் இரண்டு ஆண்டுகளாக இல்லை. தினமும்50க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஸ்கேன் செய்ய வருவர். கர்ப்பிணி பெண்கள், சிறுநீரக பிரச்னை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு அல்ட்ரா ஸ்கேன் எடுக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் அல்ட்ரா ஸ்கேன் இலவசமாக நோயாளிகளுக்கு செய்யப்படுகிறது.இந்த மருத்துவமனையில் அல்ட்ரா ஸ்கேன் டாக்டர் இல்லாததால் ஸ்கேன் செய்ய தனியார் லேப்புகளுக்கு சென்று நோயாளிகள் எடுத்து வருகின்றனர். ஒரு ஸ்கேன் எடுப்பதற்கு ஆயிரம் ரூபாயில்இருந்து 2, 3 ஆயிரம் என கட்டணம் தனியார்லேபுகளின் வசூல் செய்யப்படுகிறது. இதனால் ஏழை நோயாளிகள் சிரமப்படுகின்றனர். வாரத்தில் ஒரு நாள் மட்டும் வெளியிடத்தில் இருந்து அல்ட்ரா ஸ்கேன் செய்ய ஒரு டாக்டர் வந்து செல்கிறார். அந்த நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பலர் எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.