| ADDED : ஏப் 06, 2024 04:03 AM
ராஜபாளையம், : ராஜபாளையத்தில் தேர்தல் அறிவிப்பை காரணமாக வைத்து அரசியல்வாதிகள் மண் திருட்டில் ஈடுபட்டு வருவதை அதிகாரிகளின் பாராமுககத்தால் மண்வளம் கேள்விக்குறியாகிறது. கொள்ளை போவது பற்றிய நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.ராஜபாளையம் சுற்றுவட்டார கண்மாய்களில் மண் திருட்டில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கைகோர்த்து விவசாயிகளையும், மக்களையும் கேலிக் கூத்தாக்கி வருவது தொடர்கிறது. தேர்தல் கால பணிகளில் போலீசார் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட அலுவல்களை விட்டு முக்கிய பணிகளில் கவனம் செலுத்துவர்.கடந்த உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் அறிவிப்பின் பின்னரும் இதை காரணமாக வைத்து கண்மாய்களில் மண் திருட்டு தடையின்றி நடந்து வந்தது. தற்போதும் ஒரு வாரமாக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார், சிவகிரி பட்டா நிலம், கண்மாய் உள்ளிட்ட 3 இடங்களிலிருந்து மாவட்டம் தாண்டி ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சொக்கநாதன் புத்துார், மம்சாபுரம், கொல்லங் கொண்டான் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளுக்கு 17 டிப்பர் லாரிகள் மூலம் மண் அள்ளி கொண்டு வரப்படுகிறது.அரசியல்வாதிகள், அலுவலர்கள் கண்காணிப்பில் இங்குள்ள செங்கல் சூளைகளுக்கு விதிகளை மீறி அதிக விலை வைத்து மண் சப்ளை நடந்து வருகிறது.பறக்கும் படையினரும் வங்கிகளுக்கு பணம் நிரப்பும் வாகனத்தை பிடித்து இவற்றை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.தேர்தல் கால பரப்பரப்பை காரணமாக வைத்து நடந்து வரும் இது போன்ற செயல்களால் மண்வளம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் சிக்கலை சந்திக்கின்றனர்.மாவட்ட நிர்வாகம் சொக்கநாதன் புத்துார் செக் போஸ்ட் கேமரா பதிவை ஆய்வு செய்து மண் கடத்தலுக்கு ஈடுபட்டு வருபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.