காரியாபட்டியில் திருடர்கள் நடமாட்டம் இரவு ரோந்தை தீவிரப்படுத்த எதிர்பார்ப்பு
காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரவு ரோந்தை போலீசார் தீவிரப் படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இரவு நேரங்களில் தனியாக டூ வீலர்களில் செல்பவர்களை வழிமறித்து தாக்கி பணம், அலைபேசியை பறிக்கும் சம்பவம் நடந்தது. அத்துடன், பக்கத்து மாவட்டங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு, காரியாபட்டி பகுதிகளில் தஞ்சம் புகுவது, அந்த வழியை பயன்படுத்தி, வேறு பகுதிகளுக்கு எளிதில் தப்பிச் செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு நகரில் வேலைக்கு செல்பவர்களின் வீடுகளை குறிவைத்து பணம், நகைகளை திருடுவதும் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இரவு ரோந்தை அதிகப்படுத்தி, கட்டுக்குள் கொண்டு வந்தனர். நகரைச் சுற்றி பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதை தொடர்ந்து ஓரளவிற்கு குற்ற சம்பவங்கள் குறைந்தது. போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் மீண்டும் சில தினங்களாக டூவீலர் திருட்டு, இரவு நேரத்தில் நகருக்குள் புகுந்து, ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவது என திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் துளசி தெருவில் ஆளில்லாத வீட்டில் திருடர்கள் இறங்கி கதவை திறக்கும் போது, சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர் கூச்சல் போடவே டூவீலரில் தப்பி ஓடினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் போலீசார் இரவு ரோந்தை தீவிரப் படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.