உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருமங்கலம் -ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள்... விறுவிறுப்பு: செங்கோட்டை வரையிலான வேலைகள் துவங்குவது எப்போது

திருமங்கலம் -ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள்... விறுவிறுப்பு: செங்கோட்டை வரையிலான வேலைகள் துவங்குவது எப்போது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சேத்துார், சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர்,தென்காசி, செங்கோட்டை, புளியரை, ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை வழியாக கொல்லம் வரை தேசிய நெடுஞ்சாலை எண் 744 செல்கிறது. இந்த ரோடு மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட நகரங்களின் மையப்பகுதி வழியாக செல்வதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வந்தது. இதனால் எதிர்கால நலன் கருதி இந்த வழித்தடத்தை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியை 2023 முதல் மத்திய அரசு துவக்கியது. அதன்படி தற்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை ரோடு பணிகள் முழு அளவில் முடிவடைந்துள்ள நிலையில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் நகரங்களில் ரயில்வே மேம்பாலம், அழகாபுரி, கல்லுப்பட்டி, குன்னத்தூர் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் மட்டும் தான் முடிவடைய வேண்டிய நிலை உள்ளது. அனைத்து பணிகளும் டிசம்பர் இறுதிக்குள் முடிவடைந்து ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர். இத்திட்டத்தின் இரண்டாம் பகுதியான ராஜபாளையத்தில் இருந்து செங்கோட்டை வரை உள்ள 69 கிலோமீட்டர் தூரம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. இதனால் தற்போது ராஜபாளையம் முதல் செங்கோட்டை வரை கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. கனரக வாகனங்களால் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழித்தடத்திலும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொண்டு முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த வழித்தடத்தில் தற்போது நில எடுப்பு பணிகள் முடிவடைந்து, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கும் பணி துவங்கி உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு தேசிய பசுமை ஆணைய அனுமதி பெற வேண்டியது உள்ளது. புளியரை, செங்கோட்டை பகுதிகளில் வனத்துறை அனுமதியும் பெற வேண்டி உள்ளது. இதற்கான அனுமதிகள் விரைவில் பெற்று, 2026 ஆண்டு துவக்கத்திற்குள் பணிகள் துவங்கி அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்குள் பணிகள் முடிவடைய வாய்ப்புள்ளது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நில எடுப்பு பிரிவு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !