நீர் வரத்து ஓடையில் முட்புதர்கள்
விருதுநகர்: விருதுநகர் -- சாத்துார் ரோட்டின் ஓரத்தில் உள்ள நீர்வரத்து ஓடையில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மழைக்கு முன்பு மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருதுநகரில் இருந்து எம்.ஜி.ஆர்., சிலை வழியாக சாத்துார் செல்லும் ரோட்டின் ஓரத்தில் கவுசிகா நதிக்கு செல்லும் நீர்வரத்து ஓடை உள்ளது. இதை முறையாக பராமரிக்காததால் முட்புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்து அடர்ந்து நிறைந்து காணப்படுகிறது.இங்கு நீர்வரத்து ஓடை இருந்ததற்கான தடமே தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதி தற்போது குப்பை, கழிவு நீர் வெளியேற்றும் இடமாக மாறி வருகிறது. இதை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீர்வரத்து ஓடையை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.