மருத்துவமனைக்கு வருவோர் இனி நோயாளி அல்ல;மருத்துவ பயனாளி அரசாணை வெளியீடு
விருதுநகர்:மருத்துவமனைக்கு வருவோரை 'நோயாளிகள்' என அழைப்பதற்கு பதில் இனிவருங்காலங்களில் 'மருத்துவப்பயனாளிகள், மருத்துவப் பயனாளர்கள்' என அழைக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் ஆக., 1ல் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின், ''டாக்டர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருவோரை, மருத்துவ பயனாளிகளாக பார்க்க வேண்டும். இம்முகாம்களுக்கு வருவோரை மருத்துவ பயனாளிகள் என்று அழைக்க வேண்டும்,'' என பேசினார். இது தொடர்பாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில் மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருகின்றவர்களை நோயாளிகள் என அழைப்பதற்கு பதிலாக இனி வருங்காலங்களில் மருத்துவப் பயனாளிகள், மருத்துவப் பயனாளர்கள்' என அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.