விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் டிக்கெட் முன்பதிவு மையம்; முழு பயன்பாட்டிற்கு எதிர்பார்ப்பு
விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு மையம் முழுமையாக செயல்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விருதுநகர், அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை, கோவை, ஈரோடு, ஓசூர், பெங்களூர், திருப்பதி உள்பட பல வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு ரயிலில் சென்று வருகின்றனர். மேலும் தீபாவளி, பொங்கல், விடுமுறை நாட்களில் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் பெரும்பாலானோர் அரசு விரைவு போக்குவரத்து பஸ்களில் பயணிக்கின்றனர். இவர்களின் வசதிக்காக விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு மையம் திறக்கப்பட்டது.இந்த மையம் தற்போது முழுமையான செயல்பாட்டில் இல்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து விடுகின்றனர். ஆனால் ஆன்லைனில் பதிவு செய்ய தெரியாதவர்கள் தனியார் சேவை மையங்களில் டிக்கெட் பதிவு செய்ய ஒரு டிக்கெட்டிற்கு கூடுதலாக ரூ. 100 முதல் ரூ. 200 வரை கொடுக்க வேண்டிய நிலையே உள்ளது.இது போன்று கூடுதல் தொகை கொடுக்க அரசு டிக்கெட் முன்பதிவு மையங்களை நாடுகின்றனர். மேலும் ஆன்லைனில் சில நேரங்களில் கட்டணம் செலுத்துவதில் தடை ஏற்பட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போகிறது. பண்டிகை நாட்களில் ஒரு சில தனியார் சேவை மையங்கள் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் தொகைக்கு விற்பனை செய்கின்றனர்.எனவே விருதுநகரில் இருந்து வெளியூர், வெளி மாநிலங்கள் சென்று வரும் பயணிகளின் சிரமத்தை போக்குவதற்காக புது பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு மையத்தை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.