வருவாய்த்துறை அறிவிப்பிற்கு எதிர்ப்பு ஸ்ரீவி.,யில் வியாபாரிகள் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் காய்கறி மார்க்கெட் கட்டடத்தில் வருவாய்த்துறையினர் வைத்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார் தாசில்தார் பெயரில் பென்னிங்டன் காய்கறி மார்க்கெட் மேற்கு வாசலில் நேற்று இரவு ஒரு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது. அதில் பென்னிங்டன் கமிட்டிக்கு சொந்தமான காய்கறி மார்க்கெட் கட்டடங்கள் கட்டப்பட்டு 90 ஆண்டுகள் கடந்து விட்டன. கட்டடங்களால் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் உள்ளே செல்ல தடை செய்தும், உடனடியாக கடைகளை காலி செய்து மூடவும், 30 நாட்களுக்குள் இடித்து அப்புறப்படுத்தவும் சிவகாசி சப்கலெக்டரால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மக்களும் ஊழியர்களும் பென்னிங்டன் மார்க்கெட் கட்டடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் நேற்று இரவு 9:30 மணிக்கு பிளக்ஸ் போர்டுகளை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை அப்புறப்படுத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.