காரியாபட்டியில் பால வேலை நடப்பதால் போக்குவரத்தில் மாற்றம்
காரியாபட்டி: காரியாபட்டி பஜாரில் பால வேலை நடைபெறுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரியாபட்டி பஜாரில் வளைவான இடத்தில் பாலம் இருந்தது. கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள், மதுரை, அருப்புக்கோட்டை செல்லும் பஸ்கள் பஜார் வழியாக சென்று வரும். இரு வாகனங்கள் விலகிச் செல்ல சிரமம் இருந்தது. பொதுவாக அப்பகுதியில் மக்கள் கூட்டம், வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அடிக்கடி விபத்தும் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை இருந்தது. இதையடுத்து புதிய பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் இருந்து பஜார் வரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை, திருச்சி, சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் மொபசல் பஸ்கள் முக்கு ரோடு வழியாக 4 வழி சாலையில் மதுரைக்கும், அதே வழித்தடத்தில் பல்வேறு கிராமங்கள், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பணிகள் முடியும் வரை இந்த வழித்தடத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை, அருப்புக்கோட்டை செல்லும் பயணிகள் முக்கு ரோட்டில் நின்று செல்ல வேண்டும். கிராமப்புற பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வரை சென்று வருகிறது. கிராமப்புற பயணிகள் வழக்கம் போல் அங்கிருந்தே டவுன் பஸ்களில் செல்ல முடியும்.